பேரானந்தத்தைத்
தந்தருளும் பேரழகன் !
பேதைக்குப்
பகலவன் போன்றவன் !
பெருவிழியால்
புவிதனை மயக்கும் பார்த்திபன் !
பெதும்பை
அன்றாடம் துதிக்கும் பாற்கடல் வேந்தன் !
மகுடத்தில்
மயிற்பீலி சூடி நிற்கும் மதுசூதனன் !
மங்கையின்
மனதைக் கொள்ளை கொண்ட மாதவன் !
மலர்மாலை
சூடி விளையாடும் முரளி மனோகரன் !
மடந்தைக்கு
மகிழ்வை அள்ளித் தரும் முகுந்தன் !
அர்ஜுனன்னுக்குக் கீதோபதேசம் செய்த அச்யுதன் !
அரிவைக்குக்
கீதையாய் விளங்கும் அனந்தன் !
தென்றலாய்ப் புல்லாங்குழலூதும் துவாரகதீசன் !
தெரிவையின்
பார்வையில் தங்கிடும் துவாபரநாதன் !
பேரதிசயங்கள்
பல நிகழ்த்தும் பரந்தாமன் !
பேரிளம் பெண்ணின் பூஜைக்குரிய பகவான் !
புவியெங்கும் நிறைந்து நிற்கும் புருஷோத்தமன் !
பூவையின்
துணையாய் விளங்கும் புவன சுந்தரன் !
கோவர்த்தன
மலையைத் தூக்கிய கோபாலன் !
கோதையின்
உள்ளம் கவர்ந்த கோவிந்தன் !
காளியனின்
சிரசில் நர்த்தனம் ஆடிய கண்ணன் !
காரிகையின்
சலங்கையில் குடிகொண்ட கணியன் !
வெண்ணையைத்
திருடும் வேங்குழல் பாலன் !
வெகுளிப்பெண்ணின்
வேதனை தீர்க்கும் வேடன் !
ஹரியின்
அவதாரமாய்த் தோன்றிய ஹரிகிருஷ்ணன் !
ஹ்ருதயங்களில்
நிலைத்து நிற்கும் ஹ்ருஷிகேசன் !
குழலூதி
உலகை மயங்கச் செய்யும் குருவாயூரப்பன் !
குழந்தைக்கு
உலகநீதியைப் போதித்த குருவானவன் !
ஜகத்தினில்
தர்மத்தை நிலைநாட்டும் ஜகன்னிவாசன் !
ஜனனியின்
தலைவனாய்த் திகழும் ஜனார்தனன் !
சங்குச் சக்கரம் ஏந்திய நவநீத கிருஷ்ணன் !
சகியின் துயர் துடைக்கும் நந்தகோபன் !
கர்வம் கொண்ட அசுரரை வதைத்த கேசிநிஷூதனன் !
கன்னியின் கருவிழியாய்க் காட்சியளிக்கும் கேசவன் !
யசோதையின்
பிள்ளையாய் வளர்ந்த யாதவன் !
யமுனா தீரத்து
மனங்களின் யோகேஸ்வரன் !
வார்த்தைகளால்
ஜாலம் செய்யும் வார்ஷ்ணேயன் !
வாழ்வின்
ரகசியத்தைப் போதித்த வாசுதேவன் !
என் சர்வமுமாய்
விளங்கும் சர்வேஸ்வரனே !
என்னை சமர்ப்பிக்கிறேன்
உன் சரணங்களிலே !
- அரங்க ஸ்ரீஜா
No comments:
Post a Comment