அன்போடும்
பண்போடும் என்னை வளர்க்கும் அன்னை நீ !
அறிவோடும்
தெளிவோடும் என்னை ஆளாக்கிய தந்தை நீ !
கலைகளைத்
தெளிவுறக் கற்பிக்கும் என் குருநாதன் நீ !
கற்காத
கலைகளிலும் என்னை தேர்ச்சியடைய வைத்தவன் நீ !
அச்சம் கொள்ளுகையில் தைரியம் தரும் அண்ணன் நீ !
அச்சுறுத்தும்
இடையூரிலிருந்து என்னை மீட்கும் மன்னன் நீ !
சங்கடங்களில்
உடன் துணை நிற்கும் சகோதரன் நீ !
சந்தோஷங்களை
அள்ளித் தரும் என் சொந்தமும் நீ !
நாட்டியத்தில்
என் சலங்கை ஒலியாய் இருப்பதும் நீ !
பாட்டில்
என் தாளமும் ராகமுமாய்த் திகழ்வதும் நீ !
காணும்
திசையெல்லாம் தோன்றும் கடவுள் நீ !
காரிகையின்
மனம் கவர்ந்த கயவனும் நீ !
நெருக்கடியில்
நல்வழி காட்டும் நண்பன் நீ !
நெருங்கி
வந்தால் விலகி ஓடும் மாயவன் நீ !
வீணை
மீட்டுகையில் விரலில் நடமாடுபவன் நீ !
வினைப்
பயனிலிருந்து மீட்கும் விமோச்சணன் நீ !
சித்திரத்தில்
என் கரம் தீட்டும் உருவம் நீ !
சிந்தையில்
என்றும் குடிகொண்ட தர்மம் நீ !
வாழ்க்கைப்
பாதையை உணர்த்திய வழிகாட்டி நீ !
வாழ்த்துகளை
வாரி வழங்கிய என் வள்ளல் நீ !
அன்னையின்
உள்ளம் நீ !
ஆன்மாவின்
உயிரும் நீ !
சிற்பியின்
உளியும் நீ !
சிறுபிள்ளையின்
சிரிப்பும் நீ !
கொஞ்சும்
சலங்கையும் நீ !
பிஞ்சுக்
குழந்தையும் நீ !
கண்ணின்
கருவிழி நீ !
கன்னியின்
கருத்தும் நீ !
விண்ணின்
சந்திரன் நீ !
மண்ணின்
மன்னவன் நீ !
என் எல்லாமும்
நீ !
என் எல்லையும்
நீ !
உணர்ந்தேன்
உன்னை !
அர்ப்பணித்தேன்
என்னை !
- அரங்க ஸ்ரீஜா