Monday 27 January 2014

கண்ணன் என் காதலன் !!!


கண்முன் நின்றாய் - என்
கரம் பட மறைந்தாய் 

மண்ணை அளந்தாய் - என்
மனதைக் கவர்ந்தாய் 

இன்முகச் சிரிப்பால் - என்
இதயம் நிறைந்தாய் 

செந்தேன் மொழியால் - என்
செவியை நனைத்தாய் 

குழலூதி ஆநிரை மேய்த்தாய்- உன்
எழில் கொண்டு என்னை வென்றாய் 

பிஞ்சுப் பாதங்கள்அதில்
கொஞ்சும் சலங்கைகள் 
தாமரை விழிகள் - அதில்
ததும்பும் லீலைகள் 


உன் குழலிசையே என் விருந்து 
ஏன் பிரிகின்றாய் என்னிலிருந்து !
உன் வார்த்தைகளே என் வேதம் 
ஏன் காட்டுகின்றாய் என்மேல் கோபம் !

கார்முகில் வண்ணன் உன்னை 
கரம்பற்ற நினைத்தேன் நங்கை 
சூடிக்கொண்டாய் மெல்லிய மயிலிறகை  
சுந்தரனையடைய விரித்தேன் என் சிறகை 

உன் சிணுங்கலில் சிதைகிறேன் 
உன் சிந்தையில் மிதக்கிறேன் 
உன் பார்வையில் பசி மறந்தேன் 
உன் ஆடலில் எனை இழந்தேன் 

மோகம் கொண்ட மனம்
மோதி அலைகிறது தினம்
காதல் கொண்டது உள்ளம்
கண்ணில் பெருகுது வெள்ளம்

காற்றில் வரும் உன் ஓசை - அதைக்
கட்டித் தழுவிட ஆசை
மனம் கமழும் உன் பூமாலை
மார்போடு சூடுவேன் நாளை

விரல்கள் தீண்டிட - நான்
விழைந்தேன் நாணிட 
அணைக்கும் அழகிய கரம்
அதைப் பார்ப்பதற்கே சுகம்

கண்கவர் அழகில் மயங்கினேன் மங்கை 
கயவனே ! நீ வீரத்தில் வேங்கை 
செவ்விதழ் கொண்டு வருடினாய் என்னை 
செருக்கழிந்து சரணடைந்தேன் உன்னை 


அரங்க ஸ்ரீஜா 

No comments:

Post a Comment

Asamuyta Hasta Shloka - Single Handed Gestures

Hastas or Hasta Mudras are an integral part of Bharatanatyam, where stories are brought to life through hand gestures combined with facial e...